தமிழ்நாடு

தேர்தல் வருவதால் எம்ஜிஆரை பெரியப்பா சித்தப்பா என ஸ்டாலின் கூறுவார் - செல்லூர் ராஜூ

kaleelrahman

தேர்தல் நெருங்குவதால் எம்ஜிஆரை பெரியப்பா சித்தப்பா என ஸ்டாலின் கூறுவார், தற்போது எம்ஜிஆரை பெரியப்பா சித்தப்பா எனக்கூறினாலும் முதல்வர் எடப்பாடி தான். மக்கள் ஒரு மனதாக முதல்வராக எடப்பாடியாரை தீர்மானம் செய்துவிட்டனர் என அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்தார்.


மதுரை கோவில்பாப்பாகுடி பகுதியில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் மற்றும் 1 கோடியே 61 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.


அதனைத் தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது...
திமுக ஆட்சிக்காலத்தில் எந்த திட்டமும் கொடுக்கவில்லை. தான் திருடி பிறரை நம்பாதவர்கள். அதனால் எங்கள் ஆட்சியில் ஊழல் என தான் ஸ்டாலின் கூறுவார் என்றவரிடம் பெரியப்பா எம்ஜிஆர் தான் என்னை அரசியலில் பணியாற்ற அறிவுறுத்தினார் என ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு,


தேர்தல் நெருங்குவதால் பெரியப்பா சித்தப்பா எனக் கூறுவார். முரசொலியில் எம்ஜிஆரை இழிவாகவும், வாங்காத கப்பலை வாங்கியதாகவும் சொல்லியவர்கள் எழுதியவர்கள் திமுகவினர். எம்ஜிஆரை திமுக தலைவர் கலைஞர் இழிவாக பேசியபோது எம்ஜிஆர் சித்தப்பா என தெரியவில்லையா? அவரை கட்சியை விட்டு நீக்கும்போது கலைஞரிடம் சித்தப்பாவை நீக்காதீர்கள் எனக்கூறி ஸ்டாலின் அடம் பிடித்திருக்கலாமே?


எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது ஸ்டாலின் பெரியப்பா கட்சியில் சேர்ந்திருக்கலாம். நீக்க வேண்டாம் என சொல்லியிருக்கலாம். அதையெல்லாம் செய்யாமல் தேர்தல் நேரத்தில் பெரியப்பா சித்தப்பா எனக்கூறுகிறார். எந்த தலைவருக்கும், யாருக்கும் இல்லாத செல்வாக்கு எம்ஜிஆருக்கு உண்டு.


ஸ்டாலின் மட்டுமல்ல அவர் தந்தையும் ஒரு காலத்தில் சொல்லியுள்ளார். எம்ஜிஆரை ஆருயிர் நண்பர், தற்போது அவர் இல்லை எனக்கூறி என்னை தேர்ந்தெடுங்கள் எனக்கூறியவர் கலைஞர். அவர் வந்த பிறகு ஆட்சியை அவரிடம் கொடுப்பேன் என பேசியுள்ளார். எனவே அப்பாவுக்கு தப்பாமல் பிறந்துள்ளார் ஸ்டாலின். கலைஞரின் பொய்யை நம்பி இன்று மக்கள் ஓட்டு போடவில்லை. தற்போது எம்ஜிஆரை பெரியப்பா சித்தப்பா எனக்கூறினாலும் முதல்வர் எடப்பாடி தான். மக்கள் ஒரு மனதாக முதல்வராக எடப்பாடியாரை தீர்மானம் செய்து விட்டனர் என்றார் செல்லூர் ராஜூ.