செய்தியாளர்: செ.சுபாஷ்
மதுரை மாநகரிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கிடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியார் பேருந்து நிலையத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மதுரை மாநகர் வைகை ஆற்றுப் பகுதியில் உள்ள கல் பாலத்தில் நேற்றிரவு பள்ளி மாணவர் ஒருவரை 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சரமாரியாக தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவில் செல்லூர் பகுதியில் இருந்த மாணவரை அழைத்து வந்து ஆற்றுப் பகுதியில் வைத்து சரமரியாக தாக்கியதும் முதல் கட்ட விசாரணையை தெரியவந்துள்ளது.
மேலும் இந்த வீடியோ காட்சியை அடிப்படையாகக் கொண்டு செல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியை தொடர்ந்து மதுரையிலும் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்படும் மோதல் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது சக மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுதான் சேலம் எடப்பாடியிலும் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.