மதுரையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சாலைகளில் தேவையின்றி பயணம் செய்த 27 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. தங்களது அத்தியாவசிய பணிகளை தவிர வேறு எதற்காகவும் வெளியே செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே தமிழகத்தில் கொரோனாவுக்கு மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் 23 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 18 வயது இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், துபாயில் இருந்து திரும்பிய 63 வயது முதியவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த முதியவர் தற்போது வாலாஜா அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தாய்லாந்து நாட்டினருடன் பழகிய 66 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் தற்போது பெருந்துறை மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23ல் இருந்து 26ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் மதுரையில் அத்தியாவசிய தேவைகள் ஏதும் இன்றி சாலை மற்றும் வீதிகளில் சுற்றித் திரிந்த 27 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுரை காவல் ஆணையரும், கூடுதல் காவல்துறை இயக்குனருமான டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.