வெடிகுண்டு மிரட்டல் pt desk
தமிழ்நாடு

மதுரை|பள்ளிகளுக்கு தொடர்ந்து 5வது முறையாக விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் தீவிர விசாரணை

மதுரையில் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், குழந்தைகளை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் காத்திருந்தனர்.

PT WEB

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரை மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நான்கு பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக இ-மெயில் மூலமாக மிரட்டல் வந்தது. இதனையடுத்து நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

வெடிகுண்டு மிரட்டல்

இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2ஆம் தேதி 4 தங்கும் விடுதிகளுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக இ-மெயிலில் மிரட்டல் வந்தது. இதனையடுத்து வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் காவல்துறையினர் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து மதுரை பப்ளிக் பள்ளிக்கு 8ம் தேதி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. 9ம் தேதி பழங்காநத்தம் டிவிஎஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளிட்ட 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தியதில் எந்த வெடி பொருட்களும் சிக்கவில்லை.

இந்நிலையில், இன்று 5 வது முறையாக தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மதுரை கருப்பாயூரணி லட்சுமி மெட்ரிக்குலேசன் பள்ளி, கேம்பிரிட்ஜ் பள்ளி, மதுரை பப்ளிக் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளுக்கு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்திய நிலையில், அது புரளி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் செய்தி பரவிய நிலையில் மாணவர்களை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் பள்ளிகளில் குவிந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.

வெடிகுண்டு மிரட்டல்

இ-மெயில் மூலமாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வரும் நிலையில், இ-மெயில் அனுப்பிய நபர், தனி நபரா? இல்லை, வேறு ஏதேனும் சமூக விரோத குழுக்கள் மூலமாக மிரட்டல் விடுக்கப்படுகிறதா என்ற கோணங்களில் தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.