செய்தியாளர்: மருதுபாண்டி
நாமக்கல் ஹோட்டலில் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கி சாப்பிட்ட 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து ஹோட்டலுக்கு ஆட்சியர் சீல் வைத்துள்ளார். இந்த நிலையில் தென் மாவட்டங்களில் சுற்றுலா தளமான மதுரை மற்றும் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உணவகங்களிலும் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் புதிய தலைமுறை செய்தியாளர் மருதுபாண்டி மதுரை மற்றும் திருநெல்வேலி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு தற்போது பதில் அளித்துள்ளனர். அதில், கடந்த 2020 ஜனவரி முதல் 2024 மார்ச் மாதம் வரை எத்தனை கடைகளில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, மதுரை மாவட்டத்தில் 157 கடைகளும், ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டமான (திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில்) சுமார் 382 கடைகள் என மொத்தம் 539 உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் முறையாக சான்றிதழ் இல்லாமல் உணவும் நடத்தியதாக எத்தனை பேர் கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, மதுரை மாவட்டத்தில் 93 உணவகங்கள், திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 8 உணவகங்கள் மொத்தமாக சுமார் 101 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மேலும் உணவு பாதுகாப்பு துறை சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை சார்பாக மக்கள் கூடுமிடம், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தொடர்ந்து விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருவதாகவும், மதுரை மாவட்டத்தில் மட்டும் சுமார் 629 விழிப்புணர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் 705 நிகழ்ச்சிகள் என மொத்தம் சுமார் 1331 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல் பொதுமக்களுக்கு தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக உணவ உரிமையாளர்கள் மீது நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மதுரை மற்றும் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 967 உணவகங்கள் மீது நீதிமன்றம் மூலம் வழக்கு தொடுக்கப்பட்டு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 2019 ஆம் ஆண்டு தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட நிலையில், உணவு பாதுகாப்புத் துறை இன்றும் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்திலேயே செயல்பட்டு வருகிறது. அதில், கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்து தென்காசி மாவட்டத்தில் தனி உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தை உருவாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.