தமிழ்நாடு

புதுச்சேரி பல்கலை. மாணவி விவகாரம் : ஜனாதிபதிக்கு வெங்கடேசன் எம்.பி கடிதம்

புதுச்சேரி பல்கலை. மாணவி விவகாரம் : ஜனாதிபதிக்கு வெங்கடேசன் எம்.பி கடிதம்

webteam

புதுச்சேரியில் மாணவி ரபிஹா அவமானப்படுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ள விவகாரத்திற்கு மதுரை எம்.பி வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். அதில், ரபிஹாவுக்கு ஏற்பட்ட இழிவை துடைக்க முன்வர வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வருத்தம் தெரிவிப்பதன் மூலம் மாணவர்களுக்கு ஆரோக்கியமான செய்தியை விடுக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் ரபிஹா வாங்க மறுத்த தங்கப்பதக்கத்தை வழங்க முன்வர வேண்டும் எனவும் குடியரசுத் தலைவரிடம் வெங்கடேசன் கோரியுள்ளார். ரபிஹா போன்றோரை அவர்களின் உடைகளை வைத்து அவமானப்படுத்தும் செயல் அரங்கேறுவதாகவும் வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அரசியல் சாசனத்திலிருந்து 'மதச்சார்பின்மை'யை வெளியேற்ற வேண்டும் என நினைப்பவர்களே பட்டமளிப்பு விழா அரங்கிலிருந்து சகோதரி ரபிஹாவை வெளியேற்றியுள்ளனர். இதற்கு, தன் கல்வியால் பெற்ற தங்கப் பதக்கத்தைப் பெறமறுத்து தன் எதிர்ப்பை பதிவுசெய்துள்ளார் ரபிஹா. உன் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் சகோதரி!” என தெரிவித்துள்ளார்.