மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய நிதியை அளிக்க வேண்டும் என்று மத்திய சமூக நீதி அமைச்சரிடம் மதுரை எம்பி சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான பங்களா வீடு ஒன்றின் சுற்றுச்சுவர் கருங்கற்களால் கட்டப்பட்டது. அந்தச் சுற்றுச்சுவரின் உயரம் 20 அடியாகும். 80 அடி நீளம் கொண்ட அந்தக் கருங்கல் சுற்றுச்சுவரின் அகலம் 2 அடியாகும். தொடர் மழையின் காரணமாக 3 ஆள் உயரம் கொண்ட அந்தச் சுவரின் ஒரு பகுதி அருகில் இருந்த மண் வீடுகள் மீது விழுந்தது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். ஒரே நேரத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் மத்திய சமூக நீதி மேம்பாட்டுத்துறை அமைச்சர் தவார் சந்த் கெஹ்லாட்டை சந்தித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள நடூர் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பட்டியலின மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் துயர சம்பவத்திற்கு நீதி கேட்டு நாகை திருவள்ளுவன் உள்பட செயற்பாட்டாளர்களும் மற்றும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறை போராட்டக்காரர்களை கொடூரமாக தாக்கி கைது செய்துள்ளது.
காவல் துறையின் கொடூரமான தாக்குதல் குறித்தும், 17 பட்டியலின மக்கள் உயிரிழந்துள்ளது குறித்தும். தேசிய பட்டியலின ஆணையத்தின் தலைவர் பாதிக்கப்பட்ட நடூர் கிராமத்திற்கு சென்று உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தவார் சந்த் கெஹ்லாட் இடம் கோரிக்கை மனுவினை வழங்கினேன்” எனப் பதிவிட்டுள்ளார்.