2014 ஆம் ஆண்டு பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கை வாக்குறுதியில் ஒன்றான ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக்குழு சமீபத்தில் அமைக்கப்பட்டது. அந்தக் குழு முழுமையாக ஆராய்ந்து, அறிக்கை ஒன்றினை கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் வழங்கியது. அதில் இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன்பேரில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு மத்திய அமைச்சர்வை செப்டம்பர் 18 ஆம் தேதி (நேற்று முன்தினம்) ஒப்புதல் வழங்கியிருந்தது. இது தொடர்பான மசோதா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஆனால், இதற்கு எதிர்க்கட்சியை சேர்ந்த பலர் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்தான பதிவு ஒன்றினை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்..
அது பின்வருமாறு:
“ ‘ஒரு நாடு ஒரு தேர்தல் உயர் மட்ட குழு ஆலோசனை ஏற்பு மோடியின் இரும்பு போன்ற உறுதியின் வெளிப்பாடு’ - என்கிறார் அமித் ஷா
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கும் சங்கிலி என்பதைத்தான் ‘மோடியின் இரும்பு போன்ற உறுதி’ என்கிறாரா அமித் ஷா. 400 சீட் என்ற பாஜக-வின் பகல்கனவு கலைந்தது போல இதுவும் கலையும் உள்துறை அமைச்சரே!” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு, பதிலளித்திருந்த கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான வானதி ஸ்ரீனிவாசன்,
“ஜனநாயக ஒற்றுமை என்றால் உங்களுக்கு என்ன ஒவ்வாமையா சு.வெங்கடேசன் அவர்களே?” என்று பதிட்டிவிட்டிருந்த அவர்,
மேலும் “நாட்டின் ஜனநாயக ஒற்றுமையைப் பாதுகாக்கவும், நேரவிரயம் மற்றும் நிதி விரயத்தைக் குறைக்கவும், தேர்தலின் போது கட்டுக் கட்டாக கருப்புப்பணம் செலவிடப்படுவதை முறியடிக்கவும், தேர்தல் பிரச்சாரத்தினால் வளர்ச்சித் திட்டங்கள் தடைபடுவதை தவிர்க்கவும், அதிகளவிலான வாக்குப் பதிவை ஊக்குவிக்கவும் நமது மத்திய அமைச்சரவையால் முன்மொழியப்பட்ட ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தைக் கண்டு நீங்கள் எதற்காக இத்தனைப் பதட்டப்படுகிறீர்கள் எனப் புரியவில்லை.
பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரே தேர்தலாக பல மாநிலங்களில் நடந்த போதிலும் மற்றும் நடந்து கொண்டிருக்கும் வேளையிலும், அத்தேர்தல்களில் தேசிய மற்றும் மாநில கட்சிகள் மாறி மாறி தான் வெற்றி பெற்றுள்ளனவே தவிர, இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை. எந்த ஜனநாயக உரிமையும் பறிக்கப்படவில்லை.
மேலும், இது நமது நாட்டில் 1967 வரை நடைமுறையில் இருந்த ஒரு திட்டம் என்பதும், நீங்கள் பெருமதிப்பு கொண்டுள்ள மறைந்த முன்னாள் திமுக தலைவர் திரு. கருணாநிதி அவர்களே, ‘ஆண்டுதோறும் மக்கள் மாறி மாறி தேர்தல்களை சந்தித்து வருவதால், ஆட்சி இயந்திரம் பாதிக்கப்படும், எனவே, ஒருங்கிணைந்த தேர்தலை நடத்துவது தான் பொருத்தமானது’ என்று இத்திட்டத்தை ஆதரித்து தனது ‘நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பதும் ஊரறிந்த உண்மை.
அவ்வாறான இத்திட்டத்தை ‘நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கும்’ என்று நீங்கள் கூறியிருப்பது முற்றிலும் ஆதாரமற்றது.
எனவே, 400 சீட்டுகளை இலக்காக வைத்து 240 சீட்டுகளில் வெற்றி பெற்று, மக்களின் பேராதரவுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியமைத்துள்ள எங்களைப் பற்றி, வெறும் 2 சீட்டுகளுக்காக மற்றொரு கட்சியின் தயவை நம்பியுள்ள நீங்கள் விமர்சிப்பது, ‘எரிகிற வீட்டிலிருந்துகொண்டு, எதிர்த்த வீட்டுக்காரரை இளக்காரம் செய்த கதை’ போன்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்”
என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள எம்.பி. சு.வெங்கடேசன்,
“திருமதி வானதி சீனிவாசன் அவர்களே,
GST யை முறைப்படுத்தி ஒரே மாதிரி பில் போட வசதி செய்யுங்கள் எனக் கேட்டவரை அந்தப்பாடு படுத்திவிட்டு இப்பொழுது ஒரே மாதிரி தேர்தல் நடத்த வழக்காடுகிறீர்கள்.
பன்னுக்கும் பட்டருக்கும் வழிசொல்ல முடியவில்லை. இதில் பஞ்சாப்புக்கும் பாண்டிச்சேரிக்கும் வந்து வழிகாட்டுகிறீர்கள்.
ஜனாதிபதி ஆட்சி முறையை நோக்கி நாட்டை நகர்த்த நினைக்கும் பாஜக-வின் தீய எண்ணத்தை முறியடிப்போம். அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கு எதிரான எதையும் வீழ்த்தும் வலிமையும், முதிர்ச்சியும் இந்திய ஜனநாயகத்துக்கு உண்டு” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்த இந்த வார்த்தை மோதல், அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.