மேலூரில் செயற்கை மணல் தொழிற்சாலைக்காக கண்மாயில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பாலத்தை பொதுமக்களின் புகாரையடுத்து வருவாய் துறையினர் அகற்றினர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சொக்கம்பட்டியில் செயற்கை மணல் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள அய்யா ஊற்று கண்மாயில் ஆக்கிரமிப்பு செய்து, தொழிற்சாலையினர் பாலம் கட்டியுள்ளனர். இதனால் வலைச்சேரிப்பட்டி காப்பு வனக்காடுகளில் இருந்து கண்மாய்க்கு வரும் தண்ணீர் தடைப்பட்டு, நீர்நிலைகள் மற்றும் விவசாயம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், மேலூர் வட்டாட்சியர், கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். புகாரைத்தொடர்ந்து இன்று கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அலமேலு தலைமையில், வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த பாலம் அகற்றப்பட்டது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு, கிராம மக்கள் தங்கள் நன்றிகளை தெரிவித்தனர்.