தமிழ்நாடு

மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வில் பங்கேற்க குவிந்த விண்ணப்பங்கள்-குலுக்கல் முறையில் டோக்கன்

மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வில் பங்கேற்க குவிந்த விண்ணப்பங்கள்-குலுக்கல் முறையில் டோக்கன்

சங்கீதா

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நிறைவுபெற்றுள்ளது.

கொரோனா காலக்கட்டத்தால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் அனுமதியுடன் நடைபெற உள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 14-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்ள, பக்தர்களுக்கு ரூபாய் 200 மற்றும் 500 வீதம் கட்டணத்தில், கடந்த 4-ம் தேதி முதல் ஆன்லைன் முன்பதிவு துவங்கியது.

அதன்படி திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க 500 ரூபாய் கட்டணச்சீட்டு 2500 பக்தர்களுக்கும், 200 ரூபாய் கட்டணச் சீட்டு 3200 பக்தர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்பதிவு நேற்று இரவுடன் நிறைவு பெற்றுள்ள நிலையில், 7000-த்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வர பெற்றுள்ளதால், 5700 பேரை தேர்வு செய்ய நாளை முதல் ஆன்லைன் விண்ணப்பங்களுக்கான குலுக்கல் நடைபெறவுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்கள், கோயில் நிர்வாகம் மூலம் அனுப்பப்படும் உறுதி செய்யப்பட்ட குறுஞ்செய்தியை சமர்ப்பித்து, கோயில் நிர்வாக அலுவலகத்தில் 10-ம் தேதி முதல் டோக்கன்கள் பெற்றுக்கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.