தமிழ்நாடு

மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா திருக்கல்யாணம் - அனுமதி சீட்டினைப் பெற வழிமுறைகள்

மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா திருக்கல்யாணம் - அனுமதி சீட்டினைப் பெற வழிமுறைகள்

சங்கீதா

மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா திருக்கல்யாண நிகழ்விற்கான கட்டண அனுமதி சீட்டினைப் பெற, நேரடியாகவும், ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான திருக்கல்யாண நிகழ்வினை காண வரும் பக்தர்கள், 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை ஆன்லைன் மற்றும் நேரடியாக முன்பதிவிற்காக விண்ணப்பிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க ரூ.500/- கட்டணச் சீட்டு, 2500 பேருக்கும் மற்றும் ரூ.200/- கட்டணச் சீட்டு 3200 பேருக்கும் வழங்கப்படவுள்ளது. பக்தர்கள் WWW.maduraimeenakshi.Org என்ற இணையதளத்திலும், மேற்கு சித்திரை வீதி பிர்லா விஷ்ரம் தங்கு விடுதியின் அலுவலகத்திலும் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்பவர்கள் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை, லைசென்ஸ், ரேசன்கார்டு, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக் உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவண நகல் மற்றும் செல்போன் எண், மெயில் ஐடிகளை சமர்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட இடத்தை விட அதிகளவிற்கு முன்பதிவு செய்தால், கணினி முறை குலுக்கல் நடத்தி, பின்னர் அனுமதி சீட்டு வழங்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாண உற்சவத்தன்று இலவச தரிசனத்திற்கு வருகை தரக்கூடியவர்களில் முதலில் வருகை தரக்கூடியவர்களுக்கு தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டு, முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முன்பதிவிற்கான விண்ணப்ப படிவம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், 500 ரூபாய் கட்டண தரிசனத்திற்கு ஒரு நபருக்கு இரு அனுமதி சீட்டும், 200 ரூபாய் கட்டணத்திற்கு ஒரு நபருக்கு 3 அனுமதி சீட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்து, தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு 13-ம் தேதி கட்டண அனுமதி சீட்டுகள் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.