தமிழ்நாடு

அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் எப்போது? மதுரையில் தொடங்கியது சித்திரை திருவிழா

அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் எப்போது? மதுரையில் தொடங்கியது சித்திரை திருவிழா

kaleelrahman

கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் புடைசூழ உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

கொரோனா நோய் பரவல் காரணமாக மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதி இன்றி கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது,

மிக முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு, தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தி பரவசத்துடன் பக்தர்கள் புடைசூழ வெகு விமர்சையாக சித்திரை திருவிழா நடைபெறுகிறது.

இந்நிiலையில், இன்று கம்பத்தடி மண்டப கொடி மரம் அருகே மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் எழுந்தருள சிறப்பு பூஜைகளும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க மிதுன லக்னத்தில் தங்கக் கொடி மரத்தில் உற்சவக் கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து வரும் 12ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், 13ஆம் தேதி திக் விஜயம், 14ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், ஏப்ரல் 15ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம் மற்றும் கள்ளழகர் எதிர்சேவை நிகழ்வும் நடைபெற உள்ளது.

விழாவின்முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு 16ஆம் தேதி காலை 5.50 முதல் 6.20 மணிக்குள் நடைபெறுகிறது திருவிழா நடைபெறும் 12 நாட்களிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் அம்மனும் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் அனுமதியின்றி திருவிழா நடைபெற்றதால், வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கோவிலை சுற்றிலும் உள்ள சித்திரை வீதிகளில் பந்தல் அமைக்கும் பணிகள், தற்காலிக கழிவறைகள் குடிநீர் வசதிகள் என பல்வேறு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.