மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை ஒருமையில் பேசியதாக, அமைச்சர் கே.என்.நேருவுக்கு மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மதுரையில் கடந்த புதன்கிழமையன்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் விமான நிலைய விரிவாக்க கட்டுமான பணிகள் குறித்து கேள்வி எழுப்பியதற்கு முறையான பதில் அளிக்ககாமல் "சம்பந்தப்பட்டவர்களை விட்டு விட்டு என்னிடம் வந்து கேட்கிறீர்கள்” என்கிற தொணியில் பேசினார். தொடர்ந்து, ‘மதுரை குறித்த விவரங்களை எம்பி சு.வெங்கடேசனிடம் கேட்கவும்’ எனக்கூறினார். இதில், எம்.பி. சு.வெங்கடேசன் குறித்து பேசுகையில், அவரை ஒருமையில் குறிப்பிட்டு பதிலளித்துள்ளார் அமைச்சர் கே.என்.நேரு.
இதைத்தொடர்ந்து, ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியை, பொதுவெளியில் இதுபோல் பேசுவது பெரும் கண்டனத்துக்குரியது’ எனக்கூறி, இவ்விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் மா.கணேசன், புறநகர் மாவட்ட செயலாளர் கே. ராஜேந்திரன் ஆகியோர், ‘இப்பேச்சு கண்டனத்துக்கூரியது’ என அறிக்கை வழியாக தெரிவித்துள்ளனர்.