இஸ்ரேலில் இருந்து ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலமாக டெல்லி வந்து அங்கிருந்து ஏர் இந்தியா விமான மூலம் இருவர் மதுரைக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து இஸ்ரேலில் இருந்து தமிழகம் திரும்பிய திருச்சியை சேர்ந்த தீபக் என்பவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்...
“ நான் இஸ்ரேலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். தலைநகரில்தான் இருந்தேன். நாங்கள் இருந்த பகுதியில் எந்தவித பாதிப்பும் பெரிதாக ஏற்படவில்லை. ஏவுகணை வரும்போது சைரன் சத்தம் கேட்கும். அப்போது அருகில் இருக்கும் பங்கருக்குள் சென்று ஒளிந்து கொள்வோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய செல்வகுமார் கூறுகையில்... “டைஃபான் பகுதியில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறேன். தமிழக அரசு தொடர்ந்து போன் செய்து எங்களிடம் விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். அடிக்கடி ராக்கெட் சத்தங்கள் கேட்கும். ஒரு மாதத்திற்கு மேலாக விமான சேவை இல்லாமல் சிரமப்பட்டோம். ஆனால், மத்திய மாநில அரசுகள் இணைந்து விமான கட்டணம் இல்லாமல் இலவசமாக அங்கிருந்து டெல்லிக்கும், டெல்லியில் இருந்து மதுரைக்கும் அழைத்து வந்துள்ளனர்.
நாங்கள் இருந்த பகுதியில் தினமும் ராக்கெட் விழுந்து கொண்டே இருந்தது. அப்போதெல்லாம் ஓடுவோம். நான் இருந்த இடத்தில் 40 தமிழர்கள் இருந்தார்கள். மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர். இஸ்ரேல் அரசாங்கம் உதவி செய்கிறார்கள். பாதுகாப்புக்கு அங்கு எந்த பிரச்னையும் இல்லை" என்றார்.