செய்தியாளர்: செ.சுபாஷ்
திருமங்கலம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்றி வேறு இடத்திற்கு மாற்றக் கோரி இன்று ஒருநாள் திருமங்கலம் முழுவதும் கடையடைப்பு மற்றும் கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், போராட்டத்தை கைவிடக் கோரி மாவட்ட ஆட்சியர் அமைச்சர் உள்ளிட்டோர் முன்னிலையில் இரண்டு கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தி முடிவுகள் எட்டப்படவில்லை.
இதையடுத்து அறிவித்தபடி இன்று திருமங்கலம் கல்லுப்பட்டி பகுதியில் முழு கடையடைப்பு மற்றும் டோல்கேட் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் மற்றும் கப்பலூர் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு உள்ளிட்ட சங்கத்தினர் கலந்து கொண்டனர். இதைத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார், குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து கப்பலூர் சுங்கச்சாவடி முழுவதும் 700க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட வரும் நபர்களை விரட்டிப் பிடித்து கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது கப்பலூர் சுங்கச்சாவடி போலீசார் பாதுகாப்புடன் வழக்கம்போல் இயங்கத் தொடங்கியது. கைது செய்யப்பட்டுள்ள ஆர்பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.