தமிழ்நாடு

கந்துவட்டிக்காக தொழிலாளி வீட்டை இடித்த கும்பல் : 3 பேர் கைது

கந்துவட்டிக்காக தொழிலாளி வீட்டை இடித்த கும்பல் : 3 பேர் கைது

webteam

மதுரையில் வட்டி பணம் கொடுக்காத கூலித் தொழிலாளரின் வீட்டை இடித்த விவகாரத்தில் வட்டிக்கு பணம் வழங்கிய நாகராஜன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

மதுரை சிங்கம்பிடாரி கோயில் தெருவை சேர்ந்தவர் குமார். இவர் ஒரு கூலித் தொழிலாளி. குடும்ப வறுமை காரணமாக கடந்த 2014ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரும் மதிமுக பிரமுகருமான நாகராஜன் என்பவரிடம் 5 பைசா வட்டிக்கு 2 லட்சம் ரூபாய் கடனாக  பணம் வாங்கியுள்ளார். 

இதையடுத்து குமார் கடந்த 2 ஆண்டுகளாக வட்டி பணம் கட்டாததால் 7 லட்சம் ரூபாய் வரை வட்டி கேட்டு நாகராஜன் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடந்த 11ம் தேதி 20 பேர் கொண்ட கும்பல் குமாரின் வீட்டை இடித்து தரை மட்டமாக்கினர். 

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குமார் குடும்பத்துடன் மதுரை மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் செல்லூர் காவல்நிலைய போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் கந்துவட்டி கும்பலை சேர்ந்த நாகராஜன், சீனிவாசன், செந்தில் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.