தமிழ்நாடு

நிர்மலா தேவிக்கு ஆதரவாக செயல்பட்டதா மதுரை காமராசர் பல்கலைக்கழகம்..?

Rasus

பேராசிரியை நிர்மலா தேவியை புத்தாக்க பயிற்சியிலிருந்து விடுவிக்க தேவாங்கர் கல்லூரி நிர்வாகம் கோரியதும், அதற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மறுத்ததும் அவற்றுக்கு இடையில் நடைபெற்ற கடிதப்போக்குவரத்து மூலம் தெரியவந்துள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நடைபெற்று வந்த புத்தாக்க பயிற்சியில் நிர்மலா தேவி கலந்துகொண்டிருந்தார். இந்நிலையில் புத்தாக்கப்பயிற்சிக்கு செல்ல கல்லூரி சார்பில் வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாகவும் மார்ச் 21ம் தேதி பணிக்கு திரும்புமாறும் நிர்மலா தேவிக்கு நிர்வாகம் சார்பில் 20-ம் தேதி கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால் புத்தாக்க பயிற்சியை இடையில் ரத்து செய்ய முடியாது என அக்கடிதம் அனுப்பப்பட்ட அதே நாளில் மதுரை காமராசர் பல்கலைக்ககழக நிர்வாகம் மறுத்துவிட்டது. இது நடந்த மறுநாளிலேயே அதாவது கடந்த மார்ச் 21-ம் தேதி நிர்மலா தேவி மீதான கடுமையான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்வதாக தேவாங்கர் கல்லூரி நிர்வாகம் அறிவித்திருந்தது. இதைவைத்து பார்க்கும்போது நிர்மலா தேவியை புத்தாக்க பயிற்சியிலிருந்து விடுவிக்காமல் அவருக்கு சாதகமாக மதுரை காமராசர் பல்கலைக்ககழம் நடந்து கொண்டதா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே, பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான முதற்கட்ட விசாரணை இன்றுடன் நிறைவடைந்தது. கடந்த 3 நாட்களாக ‌நடைபெற்ற விசாரணையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், பாதிக்கப்பட்ட மாணவிகள், அவர்களின் பெற்றோர், கல்லூரியின் பேராசியர்கள் ஆகியோர் நேரில் விளக்கமளித்தனர். இவ்விவகாரம் தொடர்பாக பேராசிரியர்கள் 10 பேர், காமராசர் பல்கலைக்கழக உயரதிகாரிகள் இருவர், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த இருவர் என 14 பேர் மனு அளித்துள்ளனர்‌. அடுத்தக்கட்ட விசாரணை வரும் புதன்கிழமை தொடங்கும் என விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார்.