தமிழ்நாடு

”ஆதீனமடங்கள் மடங்களா? வியாபார நிறுவனங்களா?” - நீதிபதியின் கேள்விக்கான பின்னணி!

”ஆதீனமடங்கள் மடங்களா? வியாபார நிறுவனங்களா?” - நீதிபதியின் கேள்விக்கான பின்னணி!

webteam

ஆதீனமடங்கள் மடங்களாக செயல்படுகிறதா? இல்லை வியாபார நிறுவனங்களாக செயல்படுகிறதா? என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

99 வருடம் ஒத்திக்கு விடப்பட்ட மதுரை ஆதீன சொத்துக்களை மீட்கக் கோரிய வழக்கில் அதீனமடங்கள் குறித்து பல கேள்விகளை மதுரைக்கிளை  நீதிபதிகள் எழுப்பியுள்ளனர். 

சேத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மதுரை ஆதீனமடம் மிகவும் பழமையானது. இந்த மடத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு அப்போதிருந்த மதுரை ஆதீனம், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் உள்ள 1,191 ஏக்கர் நிலங்களை பாண்டிச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு 99 வருட ஒத்திக்கு வழங்கியுள்ளார்.இதை வைத்து 2018ஆம் ஆண்டு அந்த இடம் பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த இடத்தில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இது சட்டவிரோதமானது. எனவே, மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு, “ஆதீன மட சொத்துக்கள் தனியாருக்கு ஒத்திக்கு விடப்பட்ட ஆவணங்களை பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது. ஆதீன மடங்கள் மடங்களாக செயல்படுகிறதா? இல்லை வியாபார நிறுவனங்களாக செயல்படுகிறதா? ஆதீன மட சொத்துக்களை ஒத்திக்கு விடுவதற்கு எந்த சட்டம் அனுமதிக்கிறது?

ஆதீன மடங்கள் அனைத்துமே இந்து அறநிலைத்துறைக்கு கட்டுப்பட்டவை. இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க இந்துசமய அறநிலைய துறைக்கு அதிகாரம் உள்ள நிலையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,
வழக்கு குறித்து மாவட்ட ஆட்சியர் குழு அமைத்து விசாரனை செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அந்த நிலங்களில் சட்டவிரோதமாக மணல் ஏதும் அள்ளப்பட்டு வந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை அக்டோபர் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.