Selvarani pt desk
தமிழ்நாடு

”சாகும் வரை காளை வளர்ப்பேன்”... திருமணமே செய்யாமல் ஜல்லிக்கட்டுக்காக வாழ்வை அர்ப்பணித்த வீரமங்கை!

தை மாதம் வந்தாலே ஜல்லிக்கட்டு ஃபீவர் தமிழகம் முழுவதும் பரவி விடும் வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை சில வீரமங்கைகளும் வளர்த்து வருகிறார்கள். அவர்களில் ஒருவரான மேலூரை சேர்ந்த வீர மங்கை செல்வராணி.

webteam

தை மாதம் வந்தாலே ஜல்லிக்கட்டு ஃபீவர் தமிழ்நாடு முழுவதும் பரவி, மாட்டுப்பொங்கல், காணும் பொங்கலன்று உச்சம் தொடும். காளையின் எண்ட்ரிக்காக வீரர்கள் காத்திருக்க, தங்களது காளையின் வெற்றிக்காக அதன் உரிமையாளர்கள் வாடிவாசல் தாண்டி காளைகளை வழி அனுப்பி வைப்பார்கள். சீறிப்பாயும் காளைகள் அனைத்தும் வெற்றியை தனதாக்குவதில்லை எனினும், ஒருசில காளைகள் தன்னை நெருங்கவே விடாதபடி, திமிரிப்பாய்வதுண்டு. அப்படிப்பட்ட சில காளைகளை வளர்ப்பவர்களில் வீரமங்கைகளும் இருக்கின்றனர்.

Selvarani

தந்தையுடன் தொடங்கிய ஜல்லிக்கட்டு பயணம்!

அப்படி ஒரு வீரமங்கைதான் மதுரை மேலூரைச் சேர்ந்த செல்வராணி. சென்னகரம்பட்டியைச் சேர்ந்த இவர், சிறுவயது முதலே தனது தந்தையுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இதனிடையே அவரது தாத்தா, அப்பாவெல்லாம் இறந்த பிறகு இவரும், சகோதரர்கள் இருவர் ஆகியோர் தனித்து விடப்பட்டுள்ளனர். இதனால், சில காலம் ஜல்லிக்கட்டு காளை வளர்க்க முடியாத சூழல் ஏற்பட்டது.

பிள்ளைபோல் வளர்த்த முதல் காளை - ராமு!

தான் சற்று தலையெடுத்த பிறகு, ராமு என்ற காளையை பிள்ளை போல் பார்த்து பார்த்து வளர்க்கத் தொடங்கினார் செல்வராணி. அந்த ராமுவை, சில ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியில் அவிழ்த்துவிட்டு பரிசையும் பெற்றார். பரிசாக காங்கேயம் காளையே வழங்கப்பட்ட நிலையில், மற்றுமொரு காளையையும் வாங்கி மொத்தமாக மூன்று காளைகளையும் வளர்த்து வருகிறார்.

ஜல்லிக்கட்டு பரிசுப் பொருட்களே வருமானம்! 

வழக்கமாக புண்ணாக்கு, தவிடு, வைக்கோல் உள்ளிட்டவற்றை காளைகளுக்கு கொடுத்து வரும் இவர், தற்போது ஜல்லிகட்டு போட்டி துவங்க இருப்பதால் கூடுதலாக தீவணம் வழங்கி வருகிறார். பொருளாதார ரீதியாக பிரச்னை இருந்தாலும், காளை வெற்றிபெற்றால் கிடைக்கும் தங்க காசு, வெள்ளி காசு உள்ளிட்ட பரிசு பொருட்களை விற்று, அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து செலவழித்து வருகிறார். மேலும், மதுரை அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக காளைகளை அவிழ்த்துவிட்டு வருகிறார் செல்வராணி.

Prize

திருமணம் வேண்டாம்.. ஜல்லிக்கட்டு வாழ்க்கையே போதும்!

தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டையும், காளை வளர்ப்பையும் விட்டுவிடக்கூடாது என்பதற்காகவே திருமணம் கூட செய்துகொள்ளாமல் காளைகளை வளர்த்து வருகிறார் செல்வராணி. “ஜல்லிக்கட்டு இல்லாத வாழ்க்க என்னடா வாழ்க்க, இந்த பாரம்பரியத்த, பெருமைய விட்டுடவேக் கூடாது. காளை இல்லாம நமக்கு எதுக்கு வேற வாழ்க்க. காளைங்களையே பிள்ள மாதிரி வளத்து சாமியா கும்புடுறோம். வேற என்ன வேணும்” என்று தீர்மானம் மேற்கொண்டு அதை நிறைவேற்றி வருவதாக நெகிழ்ச்சியுடன் பேசுகிறார் செல்வராணி.

எளிமையான வீடு, கொஞ்சம் இடம், 3 காளைகள் என்று வசித்து வரும் வீரமங்கை செல்வராணியின் வீடு முழுவதும் பீரோ, அண்டா, கிரைண்டர், வெங்கல பரிசு போன்ற காளைகள் பெற்றுத்தந்த பரிசுப்பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. நம்முடன் பேசிய அவர், “என்னைப்போன்று ஆர்வத்தோடு, தைரியமாக காளைகளை வளர்த்து வரும் பெண்களுக்கு உரிய மரியாதையுடன் ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்துவிட அனுமதி வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்” என்று கூறுகிறார் செல்வராணி.

bull

தனது வாழ்நாளையே காளைகளுக்கு அர்பணித்துவிட்டதாகவும், உயிர் இருக்கும் வரை காளைகளை பராமரித்து, வாழ்ந்து மறைவேன் என கூறும் செல்வராணி போன்றோர் மதுரை மண் மற்றும் தமிழர் வீரத்தின் அடையாளம் என்பதில் சந்தேகமில்லை.