தலைமை காவலர் ரேவதிக்கு போதிய பாதுகாப்பை உறுதி செய்து ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் பி.என் பிரகாஷ், புகழேந்தி அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. இதில் பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. இந்த கொலை தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன்,காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேரை சிபிசிஐடி கைது செய்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று தொடங்கியுள்ளது. அப்போது, தலைமை காவலர் ரேவதிக்கு போதிய பாதுகாப்பை உறுதி செய்து ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. ஏற்கெனவே உதவி காவல் ஆய்வாளர் ரகுகணேஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 4 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தந்தை மகனை போலீசார் லத்தியால் அடித்தது குறித்து மாஜிஸ்திரேட்டிடம் சாட்சி அளித்தவர் தலைமை காவலர் ரேவதி என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பாதுகாப்பு கேட்டும் பாதுகாப்பு தர மறுத்ததாக ரேவதியின் கணவர் குற்றம்சாட்டியிருந்தார்.