மதுரை உயர்நீதிமன்றம் pt web
தமிழ்நாடு

”காவல்துறையினரின் உதவியின்றி கஞ்சா வியாபாரம் நடைபெற வாய்ப்பில்லை”- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை காட்டம்!

மதுரை ஒத்தக்கடையில் கஞ்சா விற்பனையை முறியடிக்க நீதிமன்றம் கோரிக்கை

PT WEB

காவல்துறையினரின் உதவி இன்றி கஞ்சா வியாபாரம் நடைபெற வாய்ப்பு இல்லை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து

ராமநாதபுரம் உப்பூரைச் சேர்ந்த திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை ஒத்தக்கடை யானைமலை பகுதியில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஒத்தக்கடை ஐயப்பன் நகர் பகுதியில் 7 நபர்கள் போதை பொருட்கள் மற்றும் மது அருந்திய நிலையில், அப்பகுதியில் பிரச்சனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பணி முடிந்து வீடு திரும்பிய கான் முகமது என்பவரை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சமீப காலமாக இளம் தலைமுறையினர் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தி பிரச்சினைகளில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. ஒத்தக்கடை பகுதியில் கஞ்சா விற்பனை காவல்துறையினருக்கு தெரிந்தே நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள், கஞ்சா விற்பனை தொடர்பாக புகார் அளிக்க முன் வருவதில்லை. கஞ்சா வியாபாரிகளுக்கு, கஞ்சாவை வழங்குவது யார்? என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை. மதுரை ஒத்தக்கடை பகுதியில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை.

ஆகவே ஒத்தக்கடை ஐயப்பன் நகர் மற்றும் நீலமேக நகர் பகுதியில் போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்கவும், போதை பொருட்கள் மற்றும் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இரவு நேரங்களில் ஒத்தக்கடை பகுதியில், போதுமான அளவு காவல்துறையினரை ரோந்து பணியில் ஈடுபடுத்தவும் உத்தரவிட வேண்டும். ஒத்தக்கடையின் முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை வைக்க உத்தரவிட வேண்டும். கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சிறப்பு பிரிவை உருவாக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், தனபால் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில், "ஒத்தக்கடையில் நடைபெற்ற சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கஞ்சா உபயோகிக்கவில்லை. மது அருந்தியிருந்தனர். கடந்த 3 ஆண்டுகளில் கஞ்சா விற்பனை தொடர்பாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த 2486 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், "காவல்துறையினரின் உதவி இன்றி கஞ்சா வியாபாரம் நடைபெற வாய்ப்பு இல்லை. காவல்துறையினரின் நடவடிக்கை கடுமையாக இருந்தால் கஞ்சா புழக்கமும், அவை தொடர்பான வழக்குகளும் எப்படி அதிகரிக்கும்?” என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது? எத்தனை வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது? உள்ளிட்ட தகவல்களுடன் தமிழக உள்துறை செயலர், தமிழக காவல்துறை தலைவர், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் இயக்குனர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மே 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.