தமிழ்நாடு

தீ வைக்கப்பட்ட திருச்சி மாணவிக்கு 1.75 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவு

தீ வைக்கப்பட்ட திருச்சி மாணவிக்கு 1.75 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவு

Rasus

திருச்சியில் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவிக்கு 1.75 லட்ச ரூபாயை இடைக்கால நிவாரணமாக வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை பட்டீஸ்வரத்தைச் சேர்ந்த சுந்தர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில்," நான் தனியார் கேட்டரிங் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறேன். பொருளாதார ரீதியாக பின் தங்கிய நிலையில் உள்ள எனக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் சட்டம் 2-ஆம் ஆண்டு பயின்று வந்த எனது மகள் மீது கடந்த ஜூலை 22-ஆம் தேதி தவசெல்வன் என்பவர் பெட்ரோல் ஊற்றி எரித்ததில், 50 % தீக்காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆனால் அவருக்கு அங்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. தவச்செல்வனின் உறவினர்களின் தலையீட்டின் பேரில், எங்களை மருத்துவமனையிலிருந்து அனுப்ப முயற்சி செய்து வருகின்றனர். தமிழக அரசின் பெண்களுக்கான இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 7 முதல் 8 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மருத்துவ செலவிற்காக 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீட்டுத் தொகையை வழங்கக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, தனியார் பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை வழங்கவும், தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் இழப்பீடு திட்டத்தின் கீழ் 8 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் , மத்திய அரசு 5 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், முறையான சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அரசின் இழப்பீடுத் திட்டத்தின் கீழ், 3 முதல் 7 லட்ச ரூபாய் வரை இழப்பீடு வழங்கலாம். அதற்காக அமைக்கப்பட்ட குழுவானது ஆய்வு செய்து அறிக்கை அளித்தவுடன் இழப்பீட்டுத் தொகை குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, சட்டக்கல்லூரி மாணவிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் அறிக்கை தாக்கல் செய்யவும், இளம்பெண்ணுக்கு இடைக்கால நிவாரணமாக 1.75 லட்ச ரூபாயை வழங்கவும் உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்றைய தினம் இழப்பீடு வழங்குவது குறித்து உறுதியான தகவல் அளிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளனர்.