அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் ஆதரவாளர்கள் ஆக்கிரமித்துள்ள சிவகங்கை கவுரி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான இடத்தை அகற்ற இந்து அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கையை சேர்ந்த சேங்கைமாறன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''சிவகங்கை நகர் கவுரி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 9.58 ஏக்கர் நிலம் காஞ்சிரங்கால் குரூப், மகா சிவனேந்தல் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் தரப்பினர் ஆக்கிரமித்துள்ளனர். முன்னாள் அமைச்சரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, இந்த நிலத்தில் வணிக வளாகம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோயிலுக்கு சொந்தமான நிலத்திலுள்ள ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்ற வேண்டுமெனவும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதிகாரிகளுக்கு இது குறித்து உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் விசாரித்தனர். அறநிலையத்துறை தரப்பில், ''சம்பந்தப்பட்ட நிலம் மீட்கப்பட்டது. கட்டடத்தை ஜூன் 30ம் தேதிக்குள் அவர்களாகவே அகற்ற வேண்டுமென சட்டப்படி நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது'' என கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ''அறநிலையத்துறையின் நோட்டீசின்படி, ஆக்கிரமிப்பாளர்கள் கட்டடத்தை அகற்றிக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அறநிலையத் துறை தரப்பில் இடித்து அகற்ற வேண்டும். இதற்கான செலவை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து வசூலித்து கொள்ளலாம். இந்த ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும்'' என உத்தரவிட்டனர்.