தமிழ்நாடு

தெருவில் இறங்கி போராடுவது ஏன்?: ஜாக்டோ ஜியோவுக்கு நீதிமன்றம் கேள்வி

தெருவில் இறங்கி போராடுவது ஏன்?: ஜாக்டோ ஜியோவுக்கு நீதிமன்றம் கேள்வி

webteam

அரசின் நிதிநிலை தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த யோகநாதன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு நீதிபதிகள் சசிதரன், சாமிநாதன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்களின் கோரிக்கைகள் எதையும் அரசு நிறைவேற்றவில்லை என்பதாலேயே, போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை வாபஸ் பெற்றதாக ஜாக்டோ ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் பேசிய அரசுத்தரப்பு வழங்கறிஞர், ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் முடங்கி உள்ளதாக வாதிட்டார். செய்முறைத் தேர்வுகள் நெருங்கி வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பேசிய நீதிபதிகள், அரசு ஏன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என கேள்வி எழுப்பினர். அப்போது, 21 மாத நிலுவைத்தொகையை வழங்க அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு, அரசின் நிதிநிலை தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் கூறினர். பிரச்சனைகளுக்கு சட்டரீதியாக அணுகி தீர்வு காண முற்படாமல், நேரடியாக தெருவில் இறங்கி போராடுவது ஏன் என ஜாக்டோ ஜியோ அமைப்புக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்ரவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.