தமிழ்நாடு

இயக்குநர் ரஞ்சித் மீதான கைது தடையை நீட்டிக்க நீதிமன்றம் மறுப்பு

இயக்குநர் ரஞ்சித் மீதான கைது தடையை நீட்டிக்க நீதிமன்றம் மறுப்பு

webteam

சர்ச்சை பேச்சு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இயக்குநர் பா. ரஞ்சித்தை கைது செய்யக்கூடாது என்ற உத்தரவை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல்துறையினர் இயக்குநர் ரஞ்சித் மீது சர்ச்சை பேச்சு பேசியதாகவும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இதுதொடர்பாக இயக்குநர் பா. ரஞ்சித் முன்ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். 

அதில், “பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையே நான் குறிப்பிட்டேன். இந்தத் தகவலை வேறு பலரும் பேசி உள்ளனர். ஆனால் என்னுடைய பேச்சு மட்டும் சமூக வலைத்தளங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது. நான் உள்நோக்கத்துடன் எந்தக் கருத்தையும் பதிவு செய்யவில்லை. ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். 

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது திருப்பனந்தாளில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்ய மாட்டோம் என அரசுத்தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் பா.ரஞ்சித்திற்கு ஆதரவாக தன்னையும் இந்த வழக்கில் சேர்க்கக் கோரி வழக்கறிஞர் ரஜினி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு சட்டரீதியாக வாய்ப்பில்லை என நீதிபதி கூறினார். அதற்கு வழக்கறிஞர் ரஜினி தரப்பில் அது தொடர்பாக சில நீதிமன்ற உத்தரவுகளை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. அதே போல மனுதாரர் ரஞ்சித் தரப்பிலும் கால அவகாசம் கோரப்பட்டது. 

இதையேற்ற நீதிபதி வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார். அதுவரை கைது செய்யக்கூடாது என விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையேற்க மறுத்த நீதிபதி வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.