“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
மதுரை நரசிங்கத்தைச் சேர்ந்த கனகேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ஒவ்வொரு ஆண்டும் மதுரை சித்திரை திருவிழாவின் போது ஐந்து வகையான உணவுகளை அன்னதானமாக வழங்கி வருகிறேன். அந்த உணவுகளை சுற்றுச்சூழலுக்கு எவ்விதமான விளைவையும் ஏற்படுத்தாத வகையில் வழங்கி வருகிறேன். எவ்விதமான பாலிதீன் பொருட்களையும் பயன்படுத்தவில்லை.
இந்த ஆண்டும் அன்னதானம் வழங்குவதற்காக 20,000 செலவு செய்துள்ள நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் நாளிதழ்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிருக்கிறார். அதன்படி மதுரை, சித்திரை திருவிழாவின் போது அன்னதானம் வழங்குவோர் உணவுப் பாதுகாப்பு துறையின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல. இதற்கு முன்பு நடைபெற்ற சித்திரை திருவிழாக்களில் இது போன்ற அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அதோடு மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்பு நாளிதழ்களில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. வேறு எந்த சமூக வலைதளங்களிலும் வெளியிடப்படவில்லை. இதனால் ஏராளமானவர்கள் இதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யவில்லை. ஆகவே மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்குவோர் உணவு பாதுகாப்புத் துறையின் கீழ் பதிவு செய்து அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தண்டபாணி, விஜயகுமார் அமர்வு, "பிற சமய விழாக்களின் போது இதே போல நிபந்தனை விதிக்கப்பட்டதா? 5 லட்சம் மக்கள் ஒன்றுகூடும் இடத்தில், இந்த விதியை அமல்படுத்தி, சரிபார்ப்பது எப்படி சாத்தியம்? என கேள்வி எழுப்பினர். மேலும், போதுமான கால அவகாசம் வழங்காமல் இதுபோல நிர்பந்திக்க இயலாது. ஆகவே இந்த ஆண்டு இந்த நிபந்தனையை நடைமுறைப்படுத்த வேண்டாம். அடுத்த ஆண்டு போதிய கால அவகாசம் வழங்கி, மக்களிடம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இதனை நடைமுறைப்படுத்தகள்” என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.