தமிழ்நாடு

“கடவுள் மனிதனைத்தான் அங்கீகரிக்கிறார்; சமூகத்தை அல்ல” - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

“கடவுள் மனிதனைத்தான் அங்கீகரிக்கிறார்; சமூகத்தை அல்ல” - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

webteam

கடவுள் எந்த சமூகத்தையும் அங்கீகரிக்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

திருச்சி திருவானைக்கோவில் பகுதியில் உள்ள எல்லைப்பிடாரி அம்மன் கோவில் திருவிழாவில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து அனைவரையும் ஒருங்கிணைத்து திருவிழாவை நடத்த உத்தரவிடக்கோரி பத்மநாபன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு," நாங்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமான வழக்கைக் கையாள்கிறோம். கோயில் என்பது வழிபாட்டிற்கான ஒரு இடம். இது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. மக்கள், நம்பிக்கையின் அடிப்படையில் கோவிலுக்குச் செல்லும்போது, எந்த வித்தியாசமும் இருக்க முடியாது. இந்த விவகாரத்தைப் பொருத்தவரை, மூன்று சமூகங்களைச் சேர்ந்த நபர்களிடையே பிரச்சனை உள்ளது.

கடவுள் எந்த சமூகத்தையும் அங்கீகரிக்கவில்லை. பிரார்த்தனை செய்ய அங்கு செல்லும் மனிதனை மட்டுமே அங்கீகரிக்கிறார். வேறுபாடுகளுக்கிடையே இறைவன் இருப்பதில்லை. அத்தகைய வேறுபாடுகள் அனுமதிக்கப்பட்டால், அது அரசியலமைப்பிற்கு எதிரானதாகவும் அமையும். ஒரு கோயில்  பிரிவினைக்கான இடம் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மறுபுறம், பொதுவான நம்பிக்கை கொண்ட அனைவரும் கோவிலுக்கு வந்து வணங்குவதற்கான வசதியை செய்து தர வேண்டும். ஆகவே, இந்த விசயத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் அடிப்படையில், இது குறித்து அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டீஸ்வரி திருக்கோவிலின் இணை ஆணையர் முடிவெடுக்கலாம்" என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.