சாலைகளில் உள்ள பேரிகார்டுகளில் தனியார் விளம்பரங்கள் ஏன் வைக்கப்படுகின்றன? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த சரவணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"சாலைகளில் அதிவேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் பேரிகார்டுகள் காவல்துறையினரால் வைக்கப்படுவது வழக்கம். ஆனால் அந்த பேரிகார்டுகளே, தற்போது பல விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி 2019ஆம் ஆண்டு 57,228 சாலை விபத்துகள் நிகழ்ந்த நிலையில் 67 ஆயிரத்து 132 பேர் காயமடைந்துள்ளனர். 10 ஆயிரத்து 525 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகளில் zigzag முறையில் பேரிகார்டுகள் அமைக்கப்படுகையில் விபத்துகள் நிகழும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
தொழிலகங்கள், நிறுவனங்கள் போன்றவை தங்கள் நிறுவனத்துக்கு முன்பாக உள்ள பொது சாலைகளில் விளம்பரம் செய்யும் வகையில் பேரிகார்டுகளை வைக்கின்றன. பேரிகார்டுகளில் எவ்விதமான விளம்பரங்களும் இருக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டும் இந்த நடைமுறை தொடர்கிறது. மேலும் பேரிகார்டுகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் முறையாக ஒட்டப்படாததால் இரவு நேரங்களில் விபத்துகள் அதிகரிக்கின்றன. இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே தமிழகத்தின் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலும், பொது இடங்களிலும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் சுற்றித்திரிவதைத் தடுக்கவும், நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளை அகற்றவும் எந்தெந்த இடங்களில் பேரிகார்டுகளை வைக்கலாம் என்பது குறித்தும் முறையான வழிகாட்டுதல்களை பிறப்பிக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு, தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன? நீதிமன்றம் உத்தரவிட்டும், சாலைகளில் உள்ள பேரிகார்டுகளில் தனியார் விளம்பரங்கள் ஏன் வைக்கப்படுகின்றன? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, அதிவேகமாக சென்றதாக எவ்வளவு வழக்குகள் பதியப்பட்டுள்ளன? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பயணிக்க வேகம் நிர்ணயம் செய்வது தொடர்பாகவும் பேரிகார்டுகளில் உள்ள விளம்பரங்களை அகற்றுவது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.