செய்தியாளர்: செ.சுபாஷ்
3 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழை:
மதுரை மாநகரில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக திடீரென கனமழை பெய்தது. இதன் காரணமாக மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதியான பி.பி.குளம், முல்லை நகர் பகுதிகளில், ஆலங்குளம் கண்மாய் நீர் நிரம்பி தெருவுக்குள் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகள் முழுவதிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் அங்குள்ள பொதுமக்கள் அவசர அவசரமாக உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறினர்.
குடியிருப்புகளை சூழந்த வெள்ளம்:
ஆலங்குளம் கண்மாய் நிரம்பி வெளியேறிய வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததால் இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். முல்லைநகர் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அந்தப் பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தொடர்ச்சியாக மூன்று மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டித் தீர்த்ததால் தெருக்களில் ஆறு போல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் வீடுகள் இடிந்து விழுந்துவிடும் என்ற அச்சத்திற்கு ஆளாகினர்.
தங்குமிடம் இன்றி தண்ணீரில் தத்தளித்த மக்கள்:
இரவு நேரம் என்பதால் தங்குவதற்கு கூட இடமின்றி வீடுகளுக்குள் தண்ணீரில் தத்தளித்தனர். மதுரை ஆலங்குளம் கண்மாய் ஏற்கனவே நிரம்பி வருவதால் கரை பகுதிகளை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில், தொடர்ந்து முல்லை நகர் பகுதி முழுவதிலும் நீரில் மூழ்கியதால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
முல்லை நகர் பகுதியில் தொடர்ந்து வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து வரும் நிலையில் அதிகாரிகளும் எம்எல்ஏ உள்ளிட்ட யாரும் தங்களை கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
அதேபோல் மதுரை மாநகராட்சி 10வது வார்டு பகுதியான பாரத் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் குடியிருப்புகள் மூழ்கியது. ஒவ்வொரு பகுதிகளிலும் இடுப்பு அளவிற்கு தண்ணீர் தேங்கிய நிலையில், திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்திற்கு ஆளாகினர்.
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம்:
தாழ்வான பகுதியான பாரத் நகர் பகுதியில் கண்மாய் ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறி பலமுறை அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் திடீரென பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் ஓடைகளில் இருந்து வெளியேறிய வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். திடீரென பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தது. பாரத் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட உள்ளனர். எம்பி. சு.வெங்கடேசன்:
இந்நிலையில், மதுரை முல்லை நகரில், மழை தேங்கிய பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் புதிய தலைமுறைக்கு பிரத்தியேக பேட்டியளித்தார். அப்போது, மதுரையில் தண்ணீரில் தவிக்கும் மக்களுக்கு நான்கு பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 15 இடங்களில் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு இரவு உணவு வழங்கப்பட உள்ளது. மழை தொடரும் பட்சத்தில் கூடுதலாக இடம் ஓதுக்கப்பட்டு மக்களை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் பெய்த மழை அளவு :
சிட்டம்பட்டி 108.4 mm
மதுரை Aws (ஒத்தக்கடை) 99.5 mm
இடையப்பட்டி 89 mm
உசிலம்பட்டி 88 mm
சோழவந்தான் 84 mm
குப்பணம்பட்டி 80 mm
கள்ளந்திரி 74 mm
மதுரை மாநகர் தல்லாகுளம் 73.6 mm
மதுரை மாநகர் வடக்கு 66.6 mm
பெரியப்பட்டி 65.4 mm
ஆண்டிபட்டி 64.2 mm
மேட்டுப்பட்டி 48.2 mm
சாத்தையார் அணை 34 mm
தனியாமங்கலம் 30 mm
மேலூர் 29 mm
எழுமலை 25.6 mm
புலிப்பட்டி 17 mm
விரகனுர் 12.2 mm
விமான நிலையம் 9.6 mm
பேரையூர் 7.6 mm
திருமங்கலம் 5.4 mm
கள்ளிக்குடி 4.8 mm