டி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்பட இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துவிட்டது.
குட்கா முறைகேடு தொடர்பான ஆவணங்களை மறைத்து, டி.கே.ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு பெற்றுள்ளதாகவும், மறைக்கப்பட்ட ஆவணங்கள் சசிகலாவின் அறையில் எடுக்கப்பட்டதாகவும் கூறி மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். டி.கே.ராஜேந்திரனின் பணி நியமனத்தை சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் என்று மனுதாரர் கேட்டுக் கொண்ட வழக்கு, நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
எதிர் மனுதாரர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் பலருக்கு சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் எதிர் மனுதாரர்களான மத்திய, மாநில அரசுகள், முன்னாள் தலைமைச் செயலர், சசிகலா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டனர். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அதுவரை டி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்பட இடைக்கால தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அதற்கு நீதிபதிகள் இந்த வழக்கில் பல துறையினர் சம்மந்தப்பட்டிருப்பதால், இடைக்கால தடை விதிக்க இயலாது எனக்கூறி மறுப்பு தெரிவித்தனர். தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.