ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், 'ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கிராமத்தில் கல்குளம் மற்றும் வண்ணான் குளம் உள்பட பல்வேறு குளங்கள் உள்ளன. மழைக் காலங்களில் குளங்களில் மழைநீரை தேக்கி வைத்து, அப்பகுதி கிராம மக்கள் கால்நடைகளுக்கு, சுற்றுவட்டாரத்திற்கு குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தி வந்தனர். சுற்றுவட்டார கிராமங்களில் பல்வேறு குளங்களில் நீர்வற்றி விட்டதால் இந்த குளங்களையே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக குளங்களில் ஆகாய தாமரை செடிகள் மற்றும் பாசான் நிரம்பியதால் அந்த தண்ணீர் பயன்படுத்த முடியாத அளவிற்கு பாதிப்படைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் அச்சத்துடன் தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். குளத்தில் இருக்கக்கூடிய ஆகாய தாமரை செடிகளை அகற்றக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, தொண்டி கிராமத்தில் உள்ள கல்குளம் மற்றும் வண்ணான் குளம் ஆகியவற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என கூறியிருந்தார்
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணை வந்தது. மனுதாரர் தரப்பில், குளங்களில் தாமரை செடிகள் அதிக அளவில் உள்ளது என புகைப்படங்களை சமர்ப்பித்தார். இதனையடுத்து நீதிபதிகள், தாமரை செடிகள் குளங்களை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்தால் நீர் கெட்டுவிடும் என்பதற்கு ஏதேனும் அறிவியல் ரீதியான சான்றுகள் உள்ளதா? என கேள்வி எழுப்பியதோடு, வழக்கு குறித்து அரசு தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.