தமிழ்நாடு

டிக் டாக் செயலிக்கு தடை

webteam

குறும்பு வீடியோக்களை வெளியிடவும் டிக் டாக் செயலியை தரவிறக்கம் செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிக் டாக் செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி அந்த செயலிக்கு தடைவிதிக்கக் கோரி மதுரையைச் சேரந்த வழக்கறிஞர் முத்துக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இணையதளத்தில், குழந்தைகளின் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் இந்தோனேசியா, அமெரிக்காவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழகத்தில் குழந்தைகள், இளைஞர்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், அந்த சட்டத்தை ஏன் இங்கும் கொண்டு வரக்கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் நீதிமன்றமே தடைவிதிக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது என்றும் அரசே முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க முயல வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

மேலும் டிக் டாக் (Tic tok) செயலியை தரவிறக்கம் செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், டிக் டாக் செயலியை முழுவதுமாக தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். இதனையடுத்து prank show எனப்படும் குறும்புத்தனமான வீடியோ எடுப்பதற்கும் அதை தொலைக்காட்சியில் வெளியிடவும் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.