மதுரை செய்தியாளர் - சுபாஷ்
மதுரை, திருப்பரங்குன்றம் அருகே உள்ள கவிக்குயில் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(52). இவர் மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி வசந்தி 51. இவர் முண்டுவேலம்பட்டி அரசு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்குச் சிவா என்ற மகனும், வைபரி என்ற மகளும் உள்ளனர். வெங்கடேசன் பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில், மனைவி வசந்தி, வெங்கடேசனை விவகாரத்து செய்வதாகக் கூறியுள்ளார். இதனால் விரக்தி அடைந்த வெங்கடேசன் கடந்த ஒரு மாதமாக விடுமுறை எடுத்து வீட்டில் இருந்து வந்துள்ளார். மன உளைச்சலில் இருந்து வந்த வெங்கடேசன், தனது மனைவி வேலை செய்யும் முண்டு வேலம்பட்டி ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகேஸ்வரிக்கு வீடியோ ஒன்றைப் பதிவு செய்து whatsapp-ல் அனுப்பியுள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய அவர், "முருகேஸ்வரி டீச்சர் வணக்கம், இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது என் உயிர் போய்விடும், எனது உடலை எனது அப்பா, அக்கா விடம் ஒப்படைத்து விடுங்கள். நான் கண்ட இடத்தில் கடன் வாங்கி என்னைக் கேவலப்படுத்துகிறாய் என்று என் மனைவி சொன்னார். கடன் வாங்கவில்லை. இதைப் புரிய வைக்க முடியவில்லை. நான் தாயில்லா பிள்ளை, ஐந்து மாதமாகப் பசி பட்டினியோடு வாழ்ந்து விட்டேன். என் அப்பாவிடம் இருந்து என்னைப் பிரித்தார். இப்போது என் பிள்ளைகளிடம் இருந்தும் பிரித்து விட்டார்.
நான் யாரை நேசித்தேனோ அவர்களால் பலன் கிடைக்கவில்லை. என் விதி என்னை மன்னித்து விடுங்கள். என் உடலுக்குச் சடங்குகள் செய்ய வேண்டாம். நான் என் தாயைப் பார்க்கவில்லை. என் மகன், மகளுக்கு நல்வழி காட்டுங்கள் உங்களுக்கு நன்றி. எனக்குச் செய்த கொடுமைக்கு ஆண்டவன் சும்மா விட மாட்டான். எனது பேங்க் பாஸ்புக்கை பாருங்கள், கடன் எதற்கு வாங்கினேன் என்று தெரியும்" எனப் பேசியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்து சென்ற போலீசார் வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.