மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ராபாளையம் தெரு பகுதியில் இருதலங்களை கொண்ட விசாகா பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 45க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி பணிபுரிந்தும் படித்தும் வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி விடுதியில் மின் கசிவு ஏற்பட்டு கரும்புகை வெளியேறியது தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் விடுதியில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நச்சுப் புகையால் 6 பேர் மயங்கி விழுந்த நிலையில், பரிமளா, சரண்யா ஆகிய இரண்டு ஆசிரியர் உயிரிழந்த நிலையில் விடுதி வார்டன் புஷ்பா, செவிலியர் கல்லூரி மாணவி ஜனனி, சமையலர் கனி ஆகிய 4 பேர் எல்லிஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், வார்டன் புஷ்பா சிகிச்சை பலனின்றி பிரதானமாக இன்று உயிரிழந்தார்.
இது தொடர்பாக திடீர் நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தங்கும் விடுதி செயல்பட மாவட்ட நிர்வாகத்திடம் எந்தவிதமான அனுமதியும் பெறாமல் சட்ட விரோதமாக இயங்கி வந்தது விசாரணையில் தெரியவந்தது.
மிகவும் மோசமாக இருக்கும் இந்த கட்டடத்தை முழுமையாக இடிப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டிட உரிமையாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், இந்த விடுதி இடிக்கப்படாமல் தொடர்ச்சியாக செயல்பட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது இதைத் தொடர்ந்து தற்போது அந்த கட்டடத்தை இடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.