தமிழ்நாடு

மன நலம் குன்றிய இளம்பெண்ணின் கருவை கலைக்க நீதிமன்றம் உத்தரவு !

மன நலம் குன்றிய இளம்பெண்ணின் கருவை கலைக்க நீதிமன்றம் உத்தரவு !

webteam

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட மனநலம் குன்றிய இளம்பெண்ணின் 24 வார கருவை கலைக்க, அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கையை சேர்ந்த 55 வயது பெண் ஒருவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர்

“கணவரை இழந்த நான், ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறேன். எனக்கு இரண்டு மகள்கள். 26 வயதாகும் எனது இராண்டாவது மகள் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர். தற்போது நானும் அவளும் மட்டுமே வீட்டில் வசித்து வருகிறோம். நான் காலையில் ஆடு மேய்க்கச் சென்றால், மாலைதான் வீடு திரும்புவேன்.

இதனால் பகலில் வீட்டில் அவள் மட்டுமே தனியாக இருப்பாள். இதனை அறிந்துக் கொண்ட பக்கத்து வீட்டை சேர்ந்த முதியவர் காசி என்பவர் எனது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து சிவகங்கை மாவட்ட அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நான் அளித்த புகாரின்படி நடவடிக்கை எடுத்த போலீசார், காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் எனது மகள் தற்போது 12 வார கர்ப்பிணியாக இருக்கிறாள். ஆனால் அவள் இது குறித்து எந்தப் புரிதலும் இல்லாமல் இருக்கிறாள்.
மேலும் அவர் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான நல்ல உடல் மற்றும் மனநிலையிலும் இல்லை. இதனால் அவரது வயிற்றில் வளரும் கருவை கலைக்க அனுமதி வழங்கவதோடு மட்டுமல்லமால் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு இதற்கான உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனு முன்னதாக விசாரணைக்கு வந்தபோது, சிவகங்கை அரசு மருத்துவமனை முதல்வர் தரப்பில் மனுதாரரின் மகள் 24 வாரம் கருவுற்றிருப்பது உறுதி எனவும், அவர் தற்போது கருவை கலைப்பதற்கான உடல் தகுதியைப் பெற்றிருக்கிறார் எனவும் பதிலளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மனநலம் குன்றிய இளம்பெண்ணின் 24 வார கருவை கலைக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மேலும் வழக்கு நிலுவையில் இருப்பதால் டி.என்.ஏ. பரிசோதனைக்காக கருவை பாதுகாக்கவும் உத்தரவிட்டார்.