தமிழ்நாடு

“மதுரையில் தேர்தல் நடந்தால் கூடுதல் போலீஸ் தேவை” - காவல் ஆணையர்

“மதுரையில் தேர்தல் நடந்தால் கூடுதல் போலீஸ் தேவை” - காவல் ஆணையர்

webteam

சித்திரை விழாவையொட்டி மதுரையில் தேர்தல் நடந்தால் பாதுகாப்பு அளிப்பது சிரமம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதேபோல காலியாக உள்ள 21 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. மூன்று தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் தற்போது நடைபெறவில்லை.

இதனிடையே மதுரையின் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா, இந்தாண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏப்ரல் 7-ஆம் தேதி மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில், முக்கிய வைபவமான தேரோட்டம் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மதுரை சித்திரை திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் தேர்தல் நாளன்று இந்தாண்டு சித்திரை திருவிழா வருவதால், மக்களால் எப்படி வாக்களிக்க முடியும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து சித்திரை திருவிழா தொடர்பான விவரங்களை இன்றைக்குள் தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், சித்திரை விழாவையொட்டி மதுரையில் தேர்தல் நடந்தால் பாதுகாப்பு அளிப்பது சிரமம் என மதுரை ஆட்சியரிடம் மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம் அளித்துள்ளார். 

சித்திரை திருவிழா பாதுகாப்பில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளதால் தேர்தலுக்கு பாதுகாப்பு தருவது சிரமம் எனவும் அவ்வாறு தேர்தல் நடத்த வேண்டுமென்றால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு இருந்தால் மட்டுமே முடியும் எனவும் ஆணையர் தெரிவித்துள்ளார்.