தமிழ்நாடு

அதே அங்கன்வாடியிலேயே பட்டியலின ஊழியர்கள் பணிபுரிய ஆட்சியர் உத்தரவு

அதே அங்கன்வாடியிலேயே பட்டியலின ஊழியர்கள் பணிபுரிய ஆட்சியர் உத்தரவு

webteam

மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் மதுரை எஸ்.வலையப்பட்டி அங்கன்வாடியிலேயே பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஊழியர்கள் இருவரும் பணிபுரிய மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மதுரை மாவட்டத்தில் அங்கன்வாடி உள்ளிட்ட 1,550 பணியாளர்களுக்கு கடந்த 3ஆம் தேதி மாவட்ட பொறுப்பு ஆட்சியர் சாந்தகுமார் பணியாணை வழங்கினார். எஸ். வலையப்பட்டி கிராம அங்கன்வாடியில் சத்துணவு அமைப்பாளராக பட்டியலினப் பெண் நியமனம் பெற்றார். சத்துணவு உதவியாளர் மற்றும் சமையலராக மற்றொரு பெண் நியமிக்கப்பட்டார்.

எஸ். வலையப்பட்டியில் பணியில் சேர்ந்த மறுநாளே இரு பெண் பணியாளர்களுக்கும், அங்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறுப்படுகிறது. இருவரையும் அழைத்து பேசிய அதிகாரிகள், அவர்கள் இருவரையும் கிழவனூர் மற்றும் மதிப்பனூருக்கு கூடுதல் பணியாக பணியாற்ற வாய்மொழி உத்தரவிட்டனர். 

இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது, பட்டியலினப் பெண்கள் நியமனத்தில் கிராமத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை எனவும் கூடுதல் பொறுப்பாகவே அவர்களுக்கு கிழவனூர், மதிப்பனூர் பணி தரப்பட்டதாகவும் கூறினர். இதைத்தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதில், நெருக்கடிகளுக்கு பணிந்து அங்கன்வாடி பணியாளர்களை இடமாற்றம் செய்தது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளது. நான்கு வாரங்களுக்குள் மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், மதுரை எஸ்.வலையப்பட்டி அங்கன்வாடியிலேயே பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஊழியர்கள் இருவரும் பணிபுரிய மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.