தமிழ்நாடு

இரவோடு இரவாக 1,500 பேருக்கு பணி ஆணை!

இரவோடு இரவாக 1,500 பேருக்கு பணி ஆணை!

webteam

மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், இரவோடு இரவாக ஆயிரத்து 500 பணியாளர்களுக்கு அவர் எப்படி பணி ஆணை வழங்கினார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தாசில்தார் ஒருவர் அனுமதியில்லாமல் நுழைந்ததை அடுத்து அப்போதைய ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டு மதுரை ஆட்சியராக எஸ்.நாகராஜன் நியமிக்கப்பட்டார். ஒரு மாத காலம் மட்டுமே ஆட்சியராக இருந்தாலும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்தில் அவர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை அனைத்து தளங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. 

மதுரையில் காலியாக இருந்த ஆயிரத்து 500 அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர் இடங்களை நிரப்ப 2017ஆம் ஆண்டு விண்ணப்பம் பெறப்பட்டு நேர்முகத்தேர்வு முடிந்தது. 2 ஆண்டுகளாகியும் பணி ஆணை கிடைக்கவில்லை என மனுநீதி நாளில் ஏராளமானவர்கள் ஆட்சியர் எஸ்.நாகராஜனிடம் புகார் அளித்தனர். உடனடியாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய அவர், அரசியல் சிபாரிசுகளை தவிர்த்து ,மாற்றுத்திறனாளிகள், விதவைகள் என கஷ்டப்படும் நிலையிலுள்ள தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

தகுதியான ஆயிரத்து 500 பேரை தேர்வு செய்யும் பணிகள் மிக ரகசியமாக நடைபெற்றன. இரவு 9 மணிக்கு 13 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த அதிகாரிகளிடம் பணி ஆணைகள் வழங்கப்பட்டன. அவர்கள் தேர்வானோரின் வீடுகளுக்கே நேரடியாக சென்று, பணி ஆணைகளை வழங்கி , உடனே பணியில் சேர்ந்ததாகவும் கையெழுத்து வாங்கினர். சிபாரிசுகளுடன் ஏராளமானோர் காத்திருந்த நிலையில் நேர்மையான முறையில் தகுதியானவர்களுக்குப் பணி ஆணைகளை வழங்கிய எஸ்.நாகராஜனின் செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.