கணவர் உடலை அடக்கம் செய்ய மதுரை வந்த இடத்தில் ஒருமாதமாக போதிய உணவின்றி சொந்த ஊர் செல்ல முடியாமல் குழந்தைகளுடன் தவித்த பெண், ஆட்சியர் உத்தரவால் கார் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
கோவை சூலூர் வாகறையாம்பாளையம் பள்ளக்கோரையில் வசித்து வந்த அஞ்சலிதேவி என்ற பெண்ணின் கணவர் முனீஸ்வரன், நெஞ்சுவலியால் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது விருப்பப்படி அவரது சொந்த ஊரான மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள காடுப்பட்டி கிராமத்தில் உடலை அடக்கம் செய்தார் அஞ்சலிதேவி.
பின்னர் ஊர்திரும்ப முடியாமல் கைக்குழந்தைகள் உட்பட 3 குழந்தைகளுடன் கணவரின் சகோதரி வீட்டில் தங்கியிருந்தார். அவரது வீட்டிலும் வறுமை தலைவிரித்தாடியதால், சொந்த ஊர் செல்ல நினைத்த அஞ்சலிதேவி, ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் உதவியால், மாவட்ட ஆட்சியர் வினய்யை நேரில் சந்தித்து உதவி கோரினார்.
அவரின் நிலையை அறிந்த ஆட்சியர் உத்தரவிட்டதையடுத்து தேவையான அரிசி, மளிகைப்பொருட்களை அளித்து சொந்த ஊருக்கு அஞ்சலிதேவியும், குழந்தைகளும் காரில் அனுப்பிவைக்கப்பட்டனர்.