உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம், பக்தர்களின் பரவச முழக்கத்திற்கு இடையே வெகுவிமரிசையாக நடைபெற்றது.
திருவிழாக்களின் திருவிழாவான சித்திரைப் பெருவிழா கொண்டாட்டங்களால் மதுரை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான மதுரையின் அரசி மீனாட்சிக்கும் - சிவபெருமானான சுந்தரேசுவரருக்குமான திருக்கல்யாண வைபவம் களைகட்டியது. அதிகாலை முதலே மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், திருக்கல்யாணத்தை பக்தர்கள் நேரடியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். திருக்கல்யாண வைபவத்திற்கு, விழா மேடை இரண்டாயிரம் கிலோ மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மீனாட்சியும் - சுந்தரேசுவரரும் வெள்ளி சிம்மாசனத்தில் நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். பின்னர், முத்துராமைய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாடி, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.
முத்துக்கொண்டை, வைரக்கிரீடம், மாணிக்க மூக்குத்தி, தங்கக்காசுமாலை ஆபரணங்களுடன் மீனாட்சியம்மன் திருமணக் கோலத்தில் அழகுறக் காட்சியளித்தார். திருமண விழாவில் பஞ்ச கவ்யம், சுவாமி அம்பாள் காப்பு கட்டுதல் நிகழ்வுகள் நடைபெற்றன. பின்னர், மாலை மாற்றுதல் வெகுவிமரிசையாக நடந்த பிறகு மிதுன லக்னத்தில், திருக்கல்யாணம் இனிதே நடைபெற்றது. வேதமந்திரம் ஓத, மேளவாத்தியம் இசைக்க, வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யம் மீனாட்சிக்கு சுந்தரேஸ்வர் ஆசியுடன் அணிவிக்கப்பட்டது. மீனாட்சியம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர்.
திருமண வைபவத்தை தொடர்ந்து, மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முன்னதாக, திருமணத்தை காண திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். மீனாட்சியம்மன் திருமணத்தின்போது சித்திரை வீதிகளில் பெண்கள் புதுமாங்கல்ய கயிற்றை மாற்றிக்கொண்டனர்.
திருக்கல்யாண வைபத்தைக் காண, ஆயிரக்கணக்காண பக்தர்கள் கோயிலுக்கு வெளியேயும் திரண்டனர். அவர்களும் கல்யாண வைபவத்தை பார்த்து வழிபடுவதற்காக, கோயிலுக்கு வெளியே பிரமாண்ட எல்இடி திரைகள் வைக்கப்பட்டிருந்தன. சித்திரை திருவிழாவின் முக்கிய உற்சவங்களில் ஒன்றான மதுரை அரசியின் திருக்கல்யாண வைபவத்துக்கு கூடிய கூட்டத்தால் மதுரையே குலுங்கியது.