மதுரை மத்திய சிறை புதிய தலைமுறை
தமிழ்நாடு

மதுரை மத்திய சிறை வளாக சந்தையில் தீபாவளி விற்பனை அமோகம்!

மதுரை மத்திய சிறை வளாகத்தில் உள்ள சந்தையில் 25 லட்சத்து 14ஆயிரம் ரூபாய்க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

PT WEB

மதுரை மத்திய சிறை வளாகத்தில் உள்ள சந்தையில் 25 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சிறைக் கைதிகளால் தயாரிக்கப்பட்ட இனிப்பு, கார வகைகள், ஆடைகள், செக்கு எண்ணெய், ஆட்டிறைச்சி ஆகியவை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, "நவம்பர் 6ம் தேதி முதல் 16ம் தேதி வரையிலான 10 நாட்களில், இங்கு இனிப்பு மற்றும் கார வகைகள் சுமார் 16 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய்க்கும், ஆடை வகைகள் மூன்று லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும், செக்கு எண்ணெய் வகைகள் நான்கு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கும், ஆட்டிறைச்சி விற்பனை ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கும் மற்ற பொருட்கள் 6 ஆயிரத்து 900 ரூபாய்க்கும் என மொத்தமாக சுமார் 25 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது” என்று சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ஏழு லட்சம் ரூபாயாக இருந்த நிலையில் இந்தாண்டு தீபாவளி விற்பனை உயர்ந்துள்ளது. மதுரை மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சிறை செய்பொருள் விற்பனை சந்தையை புனரமைத்து கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி தொடங்கி வைத்தார்.

தீபாவளி

இந்த தீபாவளி பண்டிகை மூலம் சிறைவாசிகளை சமுதாயத்துடன் இணைக்கும் வகையிலும் சிறை செய்பொருட்கள் அதிக அளவில் மக்களிடம் சென்று சேரும் வகையிலும் சிறை சந்தையில் சிறப்பு தீபாவளி விற்பனை கடந்த 6ஆம் தேதி தொடங்கப்பட்டது.