தமிழ்நாடு

கருத்தடை சாதனம், உள்ளாடை விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை

கருத்தடை சாதனம், உள்ளாடை விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை

JustinDurai

ஆபாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள், உள்ளாடைகள் போன்றவற்றிற்கான விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சகாதேவராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், தொலைக்காட்சிகளில் ஆபாசத்தைப் பரப்பும் வகையில் கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்னை தொடர்பான மருந்துகள், உள்ளாடைகள், சோப்புகள் போன்றவற்றிற்கான விளம்பரங்கள் ஒளிப்பரப்பப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை போன்ற விளம்பரங்களை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என விதிகள் இருப்பினும் அவை முறையாக பின்பற்றப்படுவதில்லை என புகார் கூறப்பட்டுள்ளது. அதோடு விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு எவ்வித தணிக்கையும் இல்லை என்பது தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பதோடு வளர் இளம் பருவத்தினர் குற்றவாளிகளாக உருவாகும் சூழல் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆகவே திரைப்படங்களைப் போல விளம்பரங்களையும் தணிக்கைக்கு உட்படுத்தவும், கண்காணிக்கவும், அவற்றை மீறும் ஊடகங்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு, ஆபாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள், உள்ளாடைகள் உள்ளிட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலர், தமிழக செய்தி, திரைப்பட தொழில்நுட்ப மற்றும் திரைப்பட சட்டத்துறை செயலரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.