பெண் என்ற காரணத்தினால் பூசாரியாக பணியாற்ற அனுமதி மறுக்கப்படும் நிலையில், காவல்துறை பாதுகாப்புக்கோரி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. மனுதாரருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள நல்லுதேவன் பட்டியைச் சேர்ந்தவர் பூசாரி பின்னியக்காள். இவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 'லிங்கநாயக்கன்பட்டி கிராமத்தின் அருகிலுள்ள துர்க்கையம்மன் கோயிலில் எங்கள் குடும்பத்தினரே 10 தலைமுறையாக பூசாரியாக உள்ளோம். என் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது ஒரே வாரிசான நான் பூசாரி பணி செய்தேன். என் தந்தை இறந்தபிறகு நான் பெண் என்பதால் பாகுபாடு காட்டிய கிராமத்தினர் சிலர் நான், பூசாரியாக பணியாற்றக் கூடாது என தடுத்தனர்.
இதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், நான் தொடர்ந்து பூசாரியாக பணியாற்ற நீதிமன்றம் அனுமதித்தது. இதை எதிர்த்த அப்பீலில் எனக்கான உத்தரவு உறுதிபடுத்தப்பட்டது. சிவில் நீதிமன்றமும் என்னை அனுமதித்தது. ஆனால், வருவாய்த் துறையினரும், போலீசாரும் நீதிமன்ற உத்தரவுகளை மீறும் வகையிலேயே நடக்கின்றனர். என்னை பூசாரி பணி செய்ய விடாமல் தடுக்கின்றனர். இது குறித்து புகார் அளித்தால் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
கடந்த 12 ஆண்டுகளாக இந்த நிலை நீடிக்கிறது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கினால் மட்டுமே என்னால் பூசாரியாக பணியாற்ற முடியும். ஆகவே எனக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கி பூசாரியாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும்” என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிஷாபானு, மனுதாரருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.