கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கக் கோரிய வழக்ககில் மாலை 8 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணிக்குள் முடித்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்திருக்கிறது.
தற்போது சித்திரை மாதம் என்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கோவில்களில் சித்திரை திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது. இந்த திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்படுவதால் சில இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாலும், கொரோனா தொற்றை கருத்தில் கொண்டும், காவல்துறையினர் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிப்பதில்லை.
இதனால் கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க தரக்கோரி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் சிவகங்கை மாவட்டங்களில் இருந்து பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ரமேஷ்," ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை மாலை 8 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும், ஆபாசமான வார்த்தைகளும், நடனங்களும் இருக்கக்கூடாது, கொரோனா தொற்று காலம் என்பதால் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், மேலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்" உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.