சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கோவிலில், தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்க கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில், கோவில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே மனிதனுக்கு அல்ல என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் வடவன்பட்டியை சேர்ந்த சேதுபதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வடவன்பட்டி பகுதியில் உள்ள சண்டி வீரன் கோவில் திருவிழா மற்றும் எருதுகட்டு நிகழ்ச்சி வருகின்ற ஜூன் 17-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இங்கு நடைபெறக்கூடிய கோவில் திருவிழாக்களில் அனைத்து தரப்பு மக்களும் ஒன்று கூடுவார்கள். கோவில் திருவிழா மற்றும் எருதுவிடும் நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் வடவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் ஜாதி அடிப்படையாகக்கொண்டு முதல் மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. இது சட்டத்திற்கு புறம்பான செயலாகும்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வாட்டாச்சியர் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு யாருக்கும் எந்த முதல் மரியாதையும் செலுத்துவது இல்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே யாருக்கும் முதல் மரியாதை அளிக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்” என்றுக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோவில் திருவிழாக்களில் யாருக்கு முதல் மரியாதை கிடையாது என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே மனிதனுக்கு அல்ல என்று கூறிய நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை ஏற்று கோவிலில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்க வேண்டாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.