தமிழ்நாடு

சிறுபான்மை பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படுகிறதா? - நீதிபதிகள் கேள்வி!

சிறுபான்மை பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படுகிறதா? - நீதிபதிகள் கேள்வி!

PT

சிறுபான்மை பள்ளிகளில் அரசின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஏழை மாணவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றதா என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மதுரை கூடல்புதூரைச் சேர்ந்த ஜெபஸ்டின் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கிறிஸ்தவ திருச்சபைகள் சார்ந்த சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அரசு உதவி பெறும் பள்ளிகளில், சிறுபான்மை மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது கட்டாயம் என்று அரசாணை உள்ளது. ஆனால், இந்த அரசாணையை பெரும்பாலான பள்ளிகள் பின்பற்றுவதில்லை. அதைப்போல மதுரை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ சிறுபான்மை பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது சிறுபான்மை அல்லாதவர்களிடம் நன்கொடைகளை அதிக அளவில் பெற்றுக் கொண்டு அவர்களின் பிள்ளைகளுக்கு சீட்டு வழங்கப்படுகிறது.

இதனால் சிறுபான்மை ஏழை மாணவ, மாணவிகளின் கல்வி கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கல்வி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் பலனும் இல்லை. எனவே, இது சம்பந்தமாக எனது மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கெளரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “சிறுபான்மை பள்ளிகளில் அரசின் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஏழை மாணவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றதா?” என கேள்வி எழுப்பி, வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.