மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. முனியாண்டி கோவில் விழாவிற்காக நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டில் 1241 வீரர்கள், 1000 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காளைகளை 12 மருத்துவக் குழுக்கள் பரிசோதனை செய்துள்ளனர். வீரர்களை 10 மருத்துவக் குழுக்கள் பரிசோதனை செய்துள்ளனர். பார்வையாளர்களின் பாதுகாப்பு நலன் கருதி 8 அடி உயரத்திற்கு இரண்டு அடுக்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. காளைகள் மற்றும் வீரர்களின் பாதுகாப்புக்காக களம் முழுவதும் தேங்காய் நார்கள் பரப்பபட்டு உள்ளது
.
வாடிவாசலில் இருந்து 30 மீட்டர் தொலைக்குள் காளையை அடக்க வேண்டும் என்பது விதிமுறை. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக 2000 ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதில் வெற்றி பெரும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு கார், தங்ககாசு, வெள்ளிகாசு, இரு சக்கர வாகனங்கள், சைக்கிள், பீரோ, கட்டில், பாத்திரம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படவுள்ளது.
ஜல்லிக்கட்டு துவங்குவதற்கு முன் ஆட்சியர் தலைமையில் உறுதி மொழி எடுக்கப்பட்டது. பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர்கள் கொடியசைத்து ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் 6 அமைச்சர்கள், எம்.பிக்கள் எம்.எல்.ஏக்கள், ஆட்சியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு போட்டியை துவங்கும் முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜல்லிக்கட்டு புகைப்பட கண்காட்சியையும் துவங்கி வைத்தார்.