ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை ஒப்பந்தத்தின் படி 2026ம் ஆண்டு அக்டோபர் மாத்திற்குள் மதுரை AIIMS பணிகள் முடிவடைய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அதற்கான கட்டுமான பணிகள் தொடங்கிவிட்டதா? என மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மண்டாவியா பதிலளித்துள்ளார்.
அதில், 2019ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கான நிலங்களை 2020ம் ஆண்டு தமிழக அரசு வழங்கியது. 2022 அக்டோபர் 25ம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்ட மேலாண்மை ஆலோசகர் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
2021 மார்ச் 26ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பின்னர் திருத்தி அமைக்கப்பட்ட நிதி தொகையில் 1977.8 கோடி ரூபாய் என சேர்க்கப்பட்டு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையிடம் நிதிகள் கோரப்பட்டது. ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை கடன் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்த நிலையில், கடன் ஒப்பந்தத்தின்படி 2021 மார்ச் முதல் 2026 அக்டோபர் மாதம் என 5 ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் முடிவடைய வேண்டும்.
அதன் அடிப்படையில் ஏற்கெனவே மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கீழ் 50 மாணவர்கள் சேர்க்கப்பட்டு தற்காலிகமாக வேறு மருத்துவக் கல்லூரிகளில் பயின்று வருவதாகவும், அதேபோல் செயல் இயக்குநர், துணை இயக்குநர், கண்காணிப்பு பொறியாளர், நிர்வாகப் பொறியாளர், நிர்வாக அதிகாரிகள் என நியமனங்கள் மதுரையின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் எழுத்துப்பூர்வ பதில் குறிப்பிடப்பட்டுள்ளது.