தமிழ்நாடு

"அரசாங்கத்தின் எந்த ஒரு அமைச்சரும் சாலைகளில் நடக்க முடியாது"- மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை

"அரசாங்கத்தின் எந்த ஒரு அமைச்சரும் சாலைகளில் நடக்க முடியாது"- மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை

Sinekadhara

மதசார்பற்ற நாடு எனக் கூறிக்கொண்டு, ஒரு மதத்ததிற்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது நல்லதல்ல என மதுரை ஆதீனம் பேட்டியளித்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்து நடந்த பகுதியையும், அப்பர் மடத்தினையும் மதுரை ஆதீனம் பார்வையிட்டு மெளன அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதீனத்திற்கு சொந்தமான இந்தக் கோயில்களின் சொத்துக்களை வைத்துக்கொண்டு ஆளும் கட்சியினர் மிரட்டுவதாகவும், குத்தகை தொகையை தரமுடியாது என்று கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் உன்னால் திருப்பணி செய்ய முடியுமா, ஊருக்குள் நுழைய முடியுமா என ஆளும் கட்சியினர் மிரட்டுகிறார்கள் என்றும், என் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாரதப் பிரதமரையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முறையிட உள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து, கஞ்சனூரில் என்ன பிரச்னை இருந்தாலும், கவலை இல்லை. எங்கள் கோவிலுக்கு நான் செல்கிறேன். இவர்கள் என்ன தடுக்க முடியும் என அவர் தெரிவித்தார். மேலும் மதசார்பற்ற நாடு எனக் கூறிக்கொண்டு, ஒரு மதத்ததிற்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது நல்லதல்ல. ஒரு மதத்தை அழித்துவிடலாம் என நினைக்கிறார்களா? அது வெள்ளைக்காரனால் கூட முடியவில்லை. இவர்களால் என்ன செய்ய முடியும்? என அவர் தெரிவித்தார்.

பின்னர் மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பக மன்னார் ஸ்ரீ ராமனுஜர் கூறுகையில், பட்டினப் பிரவேசம் என்பது சம்பிராயத்தில் இருக்கக்கூடியது. பட்டின பிரவேசத்தை யாராலும் தடுக்க முடியாது. அதை எந்த அரசாங்கமும், எந்த ஒரு இயக்கமும் தடுக்கமுடியாது. பட்டினப் பிரவேசம் நடந்தே தீரும். அதை யாராலும் நிறுத்த முடியாது. இந்து விரோத செயல்களில் ஈடுபடுவது, கோவில்களில் தலையிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அரசாங்கத்தில் எந்த ஒரு அமைச்சர்களும் சாலைகளில் நடக்க முடியாது என்று தெரிவித்தார்.