30 நிமிடத்தில் 134 வகையான உணவுகள் தயாரித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பெண் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் இந்திரா ரவிச்சந்திரன். இவர், சமையல் கலையில் புதிய சாதனை படைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக பல நாட்கள் பயிற்சியில் ஈடுபட்ட அவர், அரைமணி நேரத்தில் சைவம் - அசைவம் என 130 வகையான உணவுகளை தயார் செய்து சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிர்வாகியின் மேற்பார்வையில் விதவிதமான தோசை, இட்லி, ஊத்தப்பம், ஆம்லெட், ஆஃபாயில், வடை, பஜ்ஜி பலவகை பனியாரம், கொழுக்கட்டைகள், புட்டு, சிக்கன் குழம்பு, சிக்கன் பிரியாணி, மீன் குழம்பு, குளிர்பானங்கள், ஜஸ்கிரீம் மற்றும் கேக் வகைகள் உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகளை தயார் செய்தார்.
இதற்கு முன்னர் ஒருமணி நேரத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஹேயன் என்ற 10 வயது சிறுவன் 122 வகையான உணவுகளை தயாரித்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இந்திரா ரவிச்சந்திரன் முறியடித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்டுஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இவரது இந்த சாதனையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.